/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புழங்கிய கோழிக்காசு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
/
புதுச்சேரியில் புழங்கிய கோழிக்காசு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியில் புழங்கிய கோழிக்காசு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியில் புழங்கிய கோழிக்காசு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
ADDED : பிப் 16, 2025 05:42 AM

பழங்கால துறைமுகங்களில் ஒன்றான புதுச்சேரியின் அரிக்கமேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் மிகவும் செழிப்புற்று வளர்ந்திருக்கின்றது. அரிக்கமேடு கி.மு., 200 முதல் கி.பி.,200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த ரோமானியர், சாதவாகனர், சீனர், பாண்டியர், சேரர், சோழர், முகலாயர் ஆட்சிக்காலத்தில் நாணயங்கள் பரவலாக கிடைத்துள்ளன. பிரெஞ்சியர் புதுச்சேரியில் 1674ல் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கத்தினர்.
பிரெஞ்சியர் வருகைக்கு முன்னர் ஆர்க்காட்டு நவாப்பின் ஆளுகைக்குட்பட்ட ஆலம்புரவி தங்க சாலையில் அடிக்கப்பட்ட நாணயங்களும், ஆங்கிலேயர்கள் சென்னைப்பட்டினம் தங்கச்சாலையில் அச்சடிக்கப்பட்ட நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன.
பிரான்சுவா மார்த்தேன் தொடக்க காலத்தில் செப்புகாசுக்கள் புழக்கத்தில் இருந்தன. 1693ல் பிரெஞ்சுக்காரர்களை துரத்திய டச்சுக்காரர்கள் இந்த செப்புக்காசுக்கள் தயாரித்தனர். அந்த நாணயத்தில் ஒரு பக்கத்தில் காளி உருவமும், மற்றொரு பக்கத்தில் புதுச்சேரி என்று தமிழிலும் நாணயத்தில் பொறித்து மக்களின் புழக்கத்தில் விட்டனர்.
இதுவே புதுச்சேரியில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட நாணயமாக அறிய முடிகிறது.
கடந்த 1699ல் ஐரோப்பில் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி மீண்டும் புதுச்சேரி பிரெஞ்சியர்கள் வசமானது. அப்போது பிரெஞ்சியர்கள் அந்த நாணயத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினர்.
காளி உருவத்திற்கு பதில் கோழி உருவத்தை பொறித்தனர். அந்த நாணயத்தில் கோழி இடது புறம் தலைமை உயர்த்தி நிற்க, ஒரு காலை மேலே உயர்த்தியும், மறு காலை தரையில் ஊன்றியவாறும் பொறிக்கப்பட்டு இருந்தது.
அது தனது இறக்கைகளை மேல் நோக்கி விசிறிபோல் விரித்தது போலவும், அதன் வால் பகுதி கீழ் நோக்கி விரித்து தொங்கவிட்டவாறும் சண்டைக்கு தயாராகும் கோழிபோல காட்சியளித்தது.
கோழியின் கால்களுக்கு கீழ புள்ளிகளால் ஆன படுக்கைகோடு ஒன்று கோழியின் முன்நோக்கி நீண்டு முடிவில் ஒரு வெற்றி கோப்பை பொறிக்கப்பட்டு இருந்தது.
அந்த காசின் மேல் விளிம்பில் புள்ளிகள் இடம் பெற்று இருந்தன. பின் பக்கத்தில் காசின் முழு பரப்பையும் அடைத்தவாறு புதுச்சேரி என்று தமிழ் எழுத்துகளால் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு இருந்தது.
புது என்ற முதல் வரிக்கும் கீழ் படுக்கைக்கோடு காணப்படுகின்றது. ச்செ என்ற இரண்டாவது வரிக்கு முன் காசின் விளிம்பையொட்டி, புள்ளிகள் இடப்பட்டுள்ளன. மூன்றாவது வரியாக ரி என்ற தமிழ் எழுத்து அலங்கரித்தது.
இந்த கோழிக்காசு அக்காலத்தில் புதுச்சேரி பகுதி மட்டும் அல்ல; தமிழகத்திலும் பிரபலமாக இருந்தது. செஞ்சியிலும் கோழிக்காசு புழக்கத்தில் இருந்தது. அதன் பின், கோழியை நீக்கிவிட்டு, பிரான்ஸ் மன்னர்களின் லில்லி மலரை அந்த நாணயத்தில் பொறித்தனர்.
ஆனால் லில்லி மக்கள் புதுச்சேரி மக்களுக்கு அறிமுகம் இல்லாததால் நெடுங்காலமாக இந்த காசுக்களையும் கோழிக்காசு என்றே புதுச்சேரி மக்கள் அழைத்து பயன்படுத்தி வந்தனர். அந்த அளவிற்கு புதுச்சேரி மக்களின் வாழ்வியலோடு இந்த கோழிக்காசு கலந்திருந்தது.