புதுச்சேரி கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி துவக்கம்
புதுச்சேரி கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 29, 2026 07:16 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் 236 ஆண்டு பழமையான கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி ரூ.11.83 கோடி செலவில் இன்று (நவ.,29) துவங்கியது.
புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றாக திகழும் கவர்னர் மாளிகையில், புதுச்சேரிக்கு வந்த பாரத பிரதமர்கள், ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.,கள் தங்கிய வரலாற்று பெருமை கொண்டது.
கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி வந்த அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தங்க வைக்கும் சமயத்தில், கட்டடத்தின் அடிப்பகுதி நிலைத் தன்மையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வேறொரு இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கட்டடத்தின் பாதுகாப்பிற்காக இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு வந்த கவர்னர்கள் அங்கு தங்கி அலுவலை தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டுகளுக்கு பெய்த கன மழை காரணமாக கவர்னர் தங்குமிடத்தில் மழை நீர் கொட்டியது. இதையடுத்து கடந்த ஆண்டு உடனடியாக கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டடத்திற்கு லோக் நிவாஸ் இடம் மாறியது.
புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு தற்போது வரை 236 ஆண்டுகளாக திகழ்ந்து வரும் கவர்னர் மாளிகை 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 40 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டடம் உள்ளது.
கீழ் தளத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய டீலக்ஸ் சூட் ரூம்கள், கவர்னர் அலுவல் அறை, அதிகாரிகள் அறை, விருந்தினர் வரவேற்பறை உள்ளன.
மேல் தளத்தில், மாகே பகுதிக்கான சூட்ரூம், தர்பார் அறை, தங்கும் அறை, சமையலறி உள்ளிட்டவை உள்ளன. தற்போது, இந்த கட்டடத்தின் உண்மை தன்மை மாறாமல் பழங்கால கட்டுமான முறைப்படி ரூ.11.83 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார். தலைமை செயலாளர் சரத் சவுகான், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கட்டடத்தின் புதுப்பிப்பு பணி 18 மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
