/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை
/
உள்விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை
ADDED : நவ 07, 2024 02:42 AM
திருக்கனுார்: திருக்கனுார் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்துதர வேண்டும்.
திருக்கனுார் மற்றும் அதwனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்டவைகளை கோவில் வளாகம் மற்றும் கிராமத்தின் ஒதுக்குபுரமான இடங்களில் விளையாடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆனால், உள் விளையாட்டுகளான டென்னீஸ், பேட்மிட்டன், கராத்தே, கூடைப் பந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதற்கான பயிற்சிகளை பெற திருக்கனுாரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள புதுச்சேரி நகரப் பகுதியான உப்பளம், லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
அதற்கான போக்குவரத்து வசதி மற்றும் செலவினம் காரணமாக, உள்விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்தும், பலர் பயிற்சிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் லாஸ்பேட்டையில் நடந்த உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, திருக்கனுார், வில்லியனுார், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் மினி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என, தெரிவித்தார்.
ஆனால், கிராமப்புறங்களில் இதுவரையில் மினி உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு கூட நடந்ததாக தெரியவில்லை.
எனவே, முதல்வர் அறிவித்தபடி, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெரும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய மினி உள்விளையாட்டு அரங்கம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.