ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒத்துழைப்பு மின் பொறியாளர் வேண்டுகோள்
ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒத்துழைப்பு மின் பொறியாளர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 24, 2026 02:46 AM
புதுச்சேரி: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறைத் தலைவர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் 85 ஆயிரம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள நுகர்வோர்களுக்கும் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட அனைத்து நுகர்வோர்களின் கட்டண முறை தற்போதுள்ள 'போஸ்ட் பெய்டு' முறையிலேயே சரியாக வழங்கபடுகிறது. நுகர்வோர்கள் Puducherry Urja/ Puducherry Minshakti என்ற செயலியை பதிவிறக்கி, மொபைல் ஓ.டி.பி., மூலம் ரிஜிஸ்டிரேசன் செய்து, மின் பயன்பாடு மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் மீட்டர்கள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சந்தேகத்தை போக்கவும், துல்லியத்தன்மையை உறுதி செய்யவும் விருப்பப்படுவோருக்கு ஸ்மார்ட் மீட்டருடன் செக் மீட்டர் பொருத்தப்படுகிறது.
தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சந்தேகங்களுக்கு 1912 அல்லது 9489080307 என்ற மொபைல் எண் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலம் தொடர்பு கொள்ளலாம். எனவே நுகர்வோர்கள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
