பணி நிறைவு சான்றிதழ் குறித்த அரசின் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிக்கை
பணி நிறைவு சான்றிதழ் குறித்த அரசின் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிக்கை
UPDATED : அக் 15, 2026 07:09 PM
ADDED : அக் 15, 2026 07:07 PM

புதுச்சேரி: பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோரை கடுமையாக பாதிக்கும், பணி நிறைவு சான்றிதழ் குறித்த அரசின் உத்தரவினை, மறு ஆய்வு செய்ய தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கவர்னர் கைலாஷ்நாதனிடம் அளித்துள்ள மனு;
மாநிலத்தில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் மற்றும் சாதாரண குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் இணைப்பு பெற, புதுச்சேரி திட்ட குழுமத்திடம் பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக, புதுச்சேரி திட்ட குழுமத்தின் வரையறைக்குள் வராத கட்டடங்களுக்கு, வணிக உரிமம் பெறுவதும் மின் இணைப்பு பெறுவதும் இயலாத ஒன்று. இதனால் கடந்த மூன்று மாதங்களாக மாநிலத்தில் புதிதாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
சிறிய கடைகளுக்கான வணிக உரிமங்களையும் கூட வழங்க மறுப்பதால் சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணி நிறைவு சான்றிதழ் பெற்று வந்தால் தான் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு கிடைக்கும் என, கூறுவதால், மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
எனவே, இந்த அரசின் உத்தரவினை மறு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
