ADDED : ஏப் 04, 2025 04:13 AM
புதுச்சேரி: சட்டசபை காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் உடனடியாக சீருடைப்படி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் போலீசார், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் சட்டசபை காவலர்களுக்கு ஆண்டுதோறும் சீருடைப்படி வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சீருடைப்படி வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் சீருடை பணியாளர்களுக்கான சீருடைப்படி, உடனடியாக வழங்க கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சீருடைப்படி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, போலீசாருக்கு சீருடைப்படியாக ஆண்டுக்கு ரூ. 7000 வீதம் 4 ஆண்டுகளுக்கான நிலுவைத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், மற்ற சீருடை பணியாளர்களான சட்டசபை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு துறையினருக்கு இதுவரையில் சீருடைப்படி வழங்கப்படவில்லை.
ஆகையால், போலீசாரை போன்று தங்களுக்கும் உடனடியாக சீருடைப்படி வழங்க வேண்டும் என சீருடை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

