/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியேறிய எஸ்.சி.,க்களுக்கு இடஒதுக்கீடு: இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க முடிவு
/
குடியேறிய எஸ்.சி.,க்களுக்கு இடஒதுக்கீடு: இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க முடிவு
குடியேறிய எஸ்.சி.,க்களுக்கு இடஒதுக்கீடு: இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க முடிவு
குடியேறிய எஸ்.சி.,க்களுக்கு இடஒதுக்கீடு: இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க முடிவு
ADDED : ஜன 20, 2025 06:32 AM
புதுச்சேரி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இ.டபுள்யூ.எஸ்., இட ஒதுக்கீட்டில் குடியேறிய எஸ்.சி., உள்பட இதர சாதியினரை சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (இ.டபுள்யூ.எஸ்) 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இச்சட்டத்தின்படி, இவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெறலாம். இதற்காக வருவாய் துறையிடம், வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
புதுச்சேரியில் 2019ம் ஆண்டு முதல் கல்வி, வேலை வாய்ப்புகளில் இ.டபுள்யூ.எஸ்., இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டில் குடியேறிய எஸ்.சி., உள்பட இதர சாதியினரை சேர்ப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் இட ஒதுக்கீடு விஷயத்தில் உடனடியாக அமல்படுத்த முடியாது. எனவே மத்திய அரசினை அணுகி கேட்க முடிவு செய்துள்ளது.
காரணம் என்ன
புதுச்சேரியை பொருத்தவரை பூர்வீக ஆதிதிராவிடர்கள், குடியேறிய ஆதிதிராவிடர்கள் உள்ளனர். 1964க்கு முன் இருந்தற்கான ஆவணங்களுடன் உள்ளவர்கள், பூர்வீக ஆதிதிராவிடர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் குடியேறிய ஆதிதிராவிடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை; நலத்திட்டங்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் பல ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டில் வரும் சூழ்நிலையில் தற்போது, இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க அரசு முடிவு செய்து, தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இதேபோல் கல்வி, வேலைவாய்ப்பில் இதுவரை இட ஒதுக்கீடு இல்லாமல் உள்ள இதர பிரிவுகளையும் இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இ.டபுள்யூ.எஸ்., தகுதி என்ன
புதுச்சேரியில், தற்போது நடைமுறையில் உள்ள, இட ஒதுக்கீட்டிற்கான வரம்புக்குள் வராமல், குடும்ப ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்குள் உள்ளோர், இடஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள். அதேநேரம், ஐந்து ஏக்கருக்கு மேல், விவசாய நிலம் வைத்திருப்போர், 1,000 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், இதற்கு தகுதியற்றவர்கள்.
மேலும், பட்டியலிடப்பட்ட சில நகராட்சிகளில், 100 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், மற்ற நகராட்சிகளில், 200 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போரும், இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியாது. பத்து சதவீத இட ஒதுக்கீட்டு சான்றிதழை பெறுவதற்கான, வருமான சான்றிதழை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வருவாயை கணக்கிட்டே அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.