/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம்... பிறக்குமா? எரியாத சிக்னலால் மக்கள் தினசரி அவதி
/
போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம்... பிறக்குமா? எரியாத சிக்னலால் மக்கள் தினசரி அவதி
போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம்... பிறக்குமா? எரியாத சிக்னலால் மக்கள் தினசரி அவதி
போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம்... பிறக்குமா? எரியாத சிக்னலால் மக்கள் தினசரி அவதி
ADDED : அக் 09, 2024 05:48 AM

புதுச்சேரி: சின்னஞ்சிறிய புதுச்சேரிக்குள் 14 லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடுகிறது. இதுதவிர, வெளியூர்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சேர்த்தால் 15 லட்சத்தை தாண்டி விடும்.
புதுச்சேரியில் பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களுக்கு ஏற்ப மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் எதுவும் செய்யவில்லை. இதனால் நகர பகுதி முழுதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது.
'கரணம் தப்பினால் மரணம்' என்ற கதியில் சாலைகளில் பயணிப்பது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உச்சகட்டத்தில் உள்ளது.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அமைத்த சிக்னல்களே, போக்குவரத்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதுதான் வேதனை. குறிப்பாக இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் நிலவும் பிரச்னைகளால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் நரக வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்திரா சிக்னலில் 4 பக்க சிக்னல் விளக்குகளும் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. சிக்னல் விளக்கு எரியாததால், வாகன ஓட்டிகள் குத்துமதிப்பாக சில நிமிடம் காத்திருந்து, சிக்னலை கடந்து செல்கின்றனர். வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் விளக்கு பழுதாகி கிடப்பது தெரியாது.
இதனால் முதல் வரிசையில் நிற்கும் வெளியூர் வாகன ஓட்டிகள் சிக்னல் விளக்கு எரியும் என வெகுநேரம் காத்திருக்கும்போது, அடுத்த திசையில் வாகனங்கள் சிக்னலை கடந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் வெகு நேரம் காத்திருக்கிருக்கும் நிலை ஏற்படுகிறது.
'அலப்பறைவி.ஐ.பி.,க்களால் தொல்லை'
அமைச்சர்கள், ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 50 பேர் வி.ஐ. பி.க்கள் என்ற பிரிவில் வைத்துள்ளனர். இவர்கள் வரும்போது ஒட்டு மொத்த சிக்னலையும் நிறுத்தி விடுகின்றனர். வி.ஐ.பி.,க்கள் கார் சென்ற பின்னர் சிக்னல் திறக்கப்படுகிறது.
இதனால் வெகு நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் கடக்க முயற்சிக்கும்போது கடும் 'டிராபிக் ஜாம்' ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு வி.ஐ.பி., சிக்னலை கடப்பதால் இந்திரா சிக்னல் நாள் முழுதும் கடும் டிராபிக்கில் சிக்கி தவிக்கிறது.
போலீசாருடன் வாக்குவாதம்
வி.ஐ.பி.,க்களுக்காக சிக்னலை திறந்து மூடும்போது வெகு நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சிக்னலில் உள்ள போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
உயர் அதிகாரிகள் சொல்வதை செய்வது மட்டுமே எங்கள் வேலை. தவறினால் எங்கள் வேலைக்கு உலை வைத்துவிடுவர் என போலீசார் புலம்புகின்றனர்.