ADDED : செப் 26, 2024 03:02 AM
பாகூர் : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 69; ஓய்வு பெற்ற தமிழக அரசு நெடுஞ்சாலை துறை ஊழியர். இவர் நேற்று முன்தினம் கடலுாருக்கு சென்றார். பின் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பாகூர் - பரிக்கல்பட்டு புறவழிச்சாலை சந்திப்பு வழியாக சென்ற போது, சாலை பணி முடிவு பெறாத நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
