/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர ஹெல்மெட் கடைகள் அகற்றம்
/
சாலையோர ஹெல்மெட் கடைகள் அகற்றம்
ADDED : ஜன 18, 2025 05:44 AM

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலையில் இயங்கி வந்த தற்காலிக ஹெல்மெட் கடைகள், தினமலர் செய்தி எதிரோலியால் அப்புறப்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், புதுச்சேரியில் ஹெல்மெட் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் புதுச்சேரி முழுதும் நுாற்றுக்கணக்கான இடங்களில் சாலையோரம் திடீர் கடைகள் அமைத்து ஹெல்மெட் வியாபாரத்தை துவக்கி உள்ளனர்.
ஒரு ஹெல்மெட் ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை விற்பனை செய்கின்றனர். இவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத தரமற்ற ஹெல்மெட்டுகள். விலை குறைவு மற்றும் அறியாமை காரணத்தால் இந்த ஹெல்மெட்டுகளை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி முழுதும் புற்றீசல் போல் முளைத்துள்ள தரமற்ற ஹெல்மெட் விற்பனையை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் தலைமையில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதுச்சேரி - கடலுார் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முள்ளோடை, நோணாங்குப்பம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட ஹெல்மெட் கடைகளை அப்புறப்படுத்தினர். மீண்டும் தரமற்ற ஹெல்மெட்டுகளை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
அப்போது, வாகன ஓட்டிகளிடம், ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம். தரமான ஹெல்மெட்டுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினர்.