சிறுமி பாலியல் பலாத்காரம்: ரவுடிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: ரவுடிக்கு 20 ஆண்டுகள் சிறை
UPDATED : மே 25, 2026 09:15 PM
ADDED : மே 25, 2026 09:04 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ரவுடிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரம், நடராஜர் நகரைச் சேர்ந்தவர் பாம் எழில் (எ) எழிலரசன், 24; பெயிண்டர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், எழிலரசனுக்கு, கடந்த 2023ம் ஆண்டு லாஸ்பேட்டை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, 2023ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி, பாம் எழில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, கட்டாயப்படுத்திப் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எழிலரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் எழிலரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், சிறுமி கடத்தல் பிரிவில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி எழிலரசன் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
