ADDED : அக் 04, 2026 08:06 PM
புதுச்சேரி: புதுச்சேரி ரவுடி ஆனந்த் கொலை வழக்கில் உளவு பார்ததாக ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற முண்டக்கண்ணு ஆனந்த், 31. ரவுடியான இவரை கடந்த மாதம் 18ம் 8 பேர் கொண்ட கும்பல், லாஸ்பேட்டை இ.சி.ஆர்., தனியார் திருமண மண்டபம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்தது.
அவரது மனைவி புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கருவடிக்குப்பம் சந்துரு, நாகராஜ், உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னாள் ஐ.ஆர்.பி.என்., போலீஸ், ஜெகன், எட்வின் பால் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதயடுத்து, அவர்கள் பத்து பேரை போலீஸ் காவலில், எடுத்து விசாரிக்க லாஸ்பேட்டை போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவர்களை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் பத்து பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் ஆனந்த் கொலையில், முத்தியால்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார்,25, என்பவர், உளவு பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
