/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்திர பதிவு துறையில் ரூ. 1,000 கோடி முறைகேடு
/
பத்திர பதிவு துறையில் ரூ. 1,000 கோடி முறைகேடு
ADDED : மார் 20, 2025 04:43 AM
எதிர்க்கட்சி தலைவர் சிவா 'திடுக்' குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது;
பட்ஜெட்டில் வருவாய் பெருக்கமும், செலவினங்கள் குறைப்பது மிக அவசியம். கடன் பெருவதையும் தவிர்க்க வேண்டும். மின் கட்டணம், கலால் துறையில் ரூ. 1,000 கோடி நிலுவை தொகையை வசூல் செய்ய வேண்டும்.
மின்துறையில் காலாவதியான, திருடுபோன மின்சாரத்திற்கு வரி விதிக்கும் மாநிலம் புதுச்சேரி. ரெஸ்டோ பார்களால் எந்த வருமானமும் இல்லை. உள்ளாட்சி, கலால், பத்திர பதிவு துறைகளில் வரி ஏற்றி விட்டு, வரியில்லா பட்ஜெட் என, கூற முடியாது.
பத்திர பதிவு துறையில் ரூ. 1,000 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. இதற்கு, உள்ளாட்சி துறை அதிகாரிகள் உடந்தை.
வில்லியனுார் தொகுதியில் மட்டும் பத்திர பதிவு துறை மூலம் ரூ. 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, கடந்த 10 ஆண்டு ஆட்சியாளர், அதிகாரிகளின் கூட்டு சதி காரணம். கலால், தொழிற்சாலை வருமான வரி, மின் கட்டண பாக்கியை வசூல் செய்திருந்தால் ரூ. 1,000 கோடி லாபம் ஈட்டி இருக்க முடியும்.
பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி விதிக்கவில்லை. வரி வசூல் செய்யவில்லை என்றால், மக்கள் நல திட்டங்களை எப்படி செய்ய முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்ட பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் குறித்து கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். ரூ. 32 கோடியில் துவங்கிய உப்பானறு பாலம் காலதாமத பணியால், ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆர்பிடேஷன் மூலம் ரூ. 19 கோடி கொடுத்தனர். மீண்டும் அதே நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை திருத்தி கொடுத்து மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்கின்றனர்.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆர்பிடேஷன் முறை ஒழித்து, இதுபோன்ற ஒப்பந்தாரர்களை பிளாக் லிஸ்டில் கொண்டு வர வேண்டும். அதிக முறை பட்ஜெட் போட்ட முதல்வரால், ஒரு தொழிற்பேட்டை கொண்டுவர முடியவில்லை. தொழிற்சாலைகளால் மட்டுமே மாநில வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தை பின்பற்றி செய்யும் சத்துணவு திட்டம், மகளிர் உதவித்தொகை திட்டங்களை போல், சி.பி.எஸ்.இ., திட்டத்தையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.
மாநில வளர்ச்சியை விட தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை மகிழ்விக்க அறிவித்த பட்ஜெட், என, கூறினார்.