/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.1,000: 'பஜன்கோ' வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்
/
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.1,000: 'பஜன்கோ' வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.1,000: 'பஜன்கோ' வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.1,000: 'பஜன்கோ' வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்
ADDED : ஆக 13, 2024 04:55 AM

புதுச்சேரி:விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் ரூ.1,000 வழங்கப்படும் எனவேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசியதாவது;
இந்திய உணவு கழகத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான குறைந்தபட்ச தரத்தை மேம்படுத்த ஆகும் கூடுதல் செலவு ஈடு செய்ய கிலோ ஒன்றுக்கு ரூ. 2 வீதம் மானியமாக வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேளாண் துறை ரூ. 6 கோடி மானியமாக வழங்குகிறது. இதற்கு மாற்றாக 100 விவசாயிகளுக்கு சேலார் பேனல் மூலம் இயங்கும் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு 30, மாநில அரசு 70 சதவீதம் மானியம் வழங்க உள்ளது. இதற்கு ரூ. 5.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குழாய் கிணறு அமைக்க அளிக்கும் மானிய நில உச்சவரம்பு ஒன்றை ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகவும், அட்டவணை விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் இருந்து அரை ஏக்கராக குறைக்கப்படும். பி.வி.சி., நிலத்தடி நீர் பாசன குழாய் அமைக்க ஏக்கருக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 45 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
'என் வீடு என் நலம்' திட்டத்தில், மாடி வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.5,000 மதிப்புள்ள பொருட்கள், அரசுப் பள்ளிகளில் 4,000 சதுர அடியில் காய்கறித் தோட்டம் அமைத்தால் ரூ.10,000 வழங்கப்படும்.
பருத்தி பயிர் செய்பவர்களுக்கு கிலோவுக்கு ரூ. 3 கூடுதலாக வழங்கி, பருத்தியை ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் கொள்முதல் செய்யப்படும். காரைக்காலில் கருவேல மரங்களை அகற்றி அந்த நிலங்களை சாகுபடிக்கு ஏற்றவாறு தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் ரூ.1,000 வழங்கப்படும். இந்தாண்டு நிவாரணத் தொகை நவம்பர் மாதம் வழங்கப்படும்.
காரைக்காலில் உள்ள பஜன்கோ புதுச்சேரி வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். அங்கு, பூச்சியியல் துறை முனைவர் பட்ட படிப்பு துவக்கப் படும். இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் ட்ரோன், டிராக்டர், பண்ணை கருவிகள் வாங்க ஆதிதிராவிடர், சிறு குறு, மகளிருக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்க பொதுப் பிரிவு 504 விவசாயிகளுக்கு ரூ. 16.35 கோடி மானியம் வழங்கப்படும். 92 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ. 3.2 கோடி மானியம் நிதியாண்டில் வழங்க மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது.
வேளாண் நலத்துறையில் காலியாக உள்ள 23 வேளாண் அலுவலர், 5 வேளாண் அலுவலர் (பொறியியல்) 5 வேளாண் அலுவலர் (நீர் நிலவியல்) பணியிடங்கள் நிரப்பபடும்.
கால்நடைத்துறை
ரூ.2.5 கோடியில் மதிப்பில் 1,000 கறவை பசுக்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீவனம் தயாரிக்க தலா ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள, 120 குச்சி தீவன அறவை இயந்திரங்கள் நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்படும். 80 புல் வெட்டும் இயந்திரங்கள் நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
75 சதவீத மானியத்தில் கோழி தொகுப்பு வழங்கப்படும். 50 சதவீத மானியத்தில் வான்கோழி குஞ்சகள் வழங்கப்படும். 75 சதவீத மானியத்தில் கறவை மாடு மற்றும் கன்று தீவனம் வழங்கப்படும்.
காப்பீடு செய்யாத கறவை பசுக்களுக்கு இழப்பீடு தொகை ரூ.6000ல் இருந்து ரூ.25 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். செல்ல பிராணிகள் வளர்ப் போரை ஊக்குவிக்க 34 கால்நடை, 2 நாய்கள் கண்காட்சி நடத்தப்படும்.
கால்நடை மருந்துகள் வாங்க ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 33 கால்நடை டாக்டர் பணியிடம் நிரப்பப்படும். அரியூர், சேதராப்பட்டு, கூடப்பாக்கம், முருங்கப்பாக்கம், திம்பநாயக்கன் பாளையம், கரையாம்புத்துார், ஏம்பலம், மடுகரை, செல்லிப்பட்டு, ரெட்டியார்பாளையம், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதியில் கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலையங்கள், சிறு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தி, ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவர்.
கொத்தபுரிநத்தம், ஆரியப்பாளையம், மணமேட்டில் புதிய கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலையம் அமைக்கப்படும். ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில், 5 பாட பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பு துவக்கப்பட்டு, தலா 2 இடங்கள் வீதம் 10 இடங்கள் நிரப்பப்படும். அதுபோல் 3 முதுகலை பாட பிரிவுகளும் புதிதாக துவக்கப்படும் என பேசினார்.