/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி
/
ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 01, 2025 11:43 PM
புதுச்சேரி: ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.21.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உழவர்கரை, வின்சன்ட் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 37; எம்.பி.ஏ., பட்டதாரி. இவரது தாய் ஜோதிடர் அரியூரை சேர்ந்த அபாஸ் என்பவரிடம், தனது மகன் மணிகண்டனுக்கு எப்போது வேலை கிடைக்கும் என ஜோதிடம் பார்த்தார்.
இதையடுத்து, மணிகண்டனை சந்தித்த அபாஸ், தனது நண்பரான பெரியார் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர், ஜிப்மர் மற்றும் அரசு துறைகளில் பல நபர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக கூறி, மணிகண்டனிடம் சுந்தரமூர்த்தியை அறிமுகப்படுத்தினார்.
சுந்தரமூர்த்தி தற்போது ஜிப்மர் 80 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை தயாராக உள்ளது. அதனை பெறுவதற்கு, ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டும் என, கூறினார். முதற்கட்டமாக, 5 லட்சம் ரூபாய், புகைப்படம், படித்த சான்றிதழ்களை அபாசிடம் கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, மணிகண்டன் பல்வேறு தவணைகளாக அபாஸ், சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடம் நேரில் மற்றும் வங்கி கணக்கு மூலம் 23 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரையில் ஜிப்மரில் வேலை வாங்கி தராததால், மணிகண்டன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதையடுத்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மட்டும் திரும்ப கொடுத்தனர். மீதமுள்ள 21 லட்சத்து 98 ஆயிரத்து 300 ரூபாய் வழங்காமல், மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், அபாஸ், சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சங்கீதா ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.