/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ரூ.360 கோடி: 61 சதவீத பணி முடிந்த நிலையில் நிதி விடுவிப்பு
/
பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ரூ.360 கோடி: 61 சதவீத பணி முடிந்த நிலையில் நிதி விடுவிப்பு
பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ரூ.360 கோடி: 61 சதவீத பணி முடிந்த நிலையில் நிதி விடுவிப்பு
பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ரூ.360 கோடி: 61 சதவீத பணி முடிந்த நிலையில் நிதி விடுவிப்பு
ADDED : மார் 04, 2025 04:28 AM
புதுச்சேரி:பிரதமர் வீடு கட்டும் திட்டம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதுவரை 61.09 சதவீதம்கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி உதவி திட்டமான பிரதமர் வீடு கட்டும் திட்டம் - நகரம் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக, இருக்கும் இடத்தில் குடிசைவாழ் பகுதியை மறு சீரமைப்பு செய்தல், வீட்டு கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம், கூட்டுபங்களிப்புடன் மலிவு விலையில் வீடுகள் வழங்கும் திட்டம், பயனாளிகள் பங்களிப்புடன் தானே தனி வீடு கட்டும் என நான்கு நிலைகளில் வீடு கட்டி கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டிற்குள் வீடுகளை கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இலக்கினை எட்டமுடியவில்லை. அதையடுத்து இந்தாண்டு டிசம்பர் வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13,843 வீடுகள்
இத்திட்டம் புதுச்சேரியில் நகர பகுதியில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் நான்கு திட்டங்களில், வீட்டுக்கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் மற்றும் பயனாளி பங்களிப்புடன் தானே தனி வீடு கட்டும் திட்டம் என, இரண்டு வகை திட்டங்கள் மட்டும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டுகிறது.
இத்திட்டத்தின் மாநில முகமை நிறுவனமாக நகர மற்றும் கிராம அமைப்பு துறை செயல்பட்டு வருகிறது. பொது, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு குடிசை மாற்று வாரியம் மூலமும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினருக்கு ஆதிதிராவிடர் துறை மூலமாக வீடுகள் கட்டு கொடுக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் 15,650 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பயனாளிகள் தானே தனி வீடு கட்டும் திட்டத்தில் 13,843 வீடுகள் கட்டவும், வீட்டுக்கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் கீழ் 2151 வீடுகள் கட்டவும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வந்தன.
வட்டி மானிய திட்டம்
வீட்டு கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் கீழ் தேசிய வீட்டு வசதி வங்கி, பயனாளிகளால் பெறப்பட்ட வீட்டு கடனுக்கான வட்டி மானியத்தை நேரடியாக பயனாளிகளின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 2,152 பயனாளிகளும் தங்கள் வீடுகளை கட்டி வட்டி மானியத்தை பெற்றனர்.
'தானே' வீடு திட்டம்
பயனாளிகள் பங்களிப்புடன் தானே தனி வீடு கட்டும் திட்டத்தின் 13,843 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், தற்போது வரை 8,457 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதாவது 61.09 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் 3,549 வீடுகள் அதாவது 25.64 சதவீத வீடுகள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன. இந்த வீடுகள் கட்டுமான பணிகளும் வேகமெடுத்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து வீடு கட்டுமான பணிகளும் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என நகர மற்றும் கிராம அமைப்பு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திட்ட தொகை
பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்றாலும், மாநில அரசும் கூடுதல் நிதியை வீடு கட்டும் திட்டத்திற்கு அளித்து வருகிறது.
குடிசை மாற்று வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய பங்கீடாக 1.50 லட்சம், மாநில அரசின் பங்கீடு 2 லட்சம் என, 3.50 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலத் துறை மூலம செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கீடு 1.50 லட்சம், மாநில அரசின் பங்கீடு 4 லட்சம் 5.50 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை செலவு
மத்திய அரசின் மொத்த பங்கீடான 207 கோடி ரூபாயில் இதுவரை 176 கோடி ரூபாய், அதாவது 85.10 சதவீதம் புதுச்சேரி அரசு பெற்றுள்ளது. புதுச்சேரி அரசு தனது பங்காக இதுவரை 193 கோடியை வழங்கியுள்ளது. வீடு கட்டும் திட்டங்களுக்காக பெறப்பட்ட 369 கோடியில் 360 கோடி, அதாவது 97.38 சதவீதம் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.