ரூ.5 கோடி பொருட்கள் பறிமுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ரூ.5 கோடி பொருட்கள் பறிமுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
UPDATED : அக் 05, 2026 01:19 AM
ADDED : அக் 05, 2026 01:17 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நேற்று வரை ரூ.5.01 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க மாவட்ட தேர்தல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை ரூ.5.01 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், மதுபானங்கள் மற்றும் போ தைப்பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
கடந்த மாதம் 7ம் தேதி முதல் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தொகுதி முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பணமாக 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 761 ரூபாய் மதிப்பிலான 2.5 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி விலையுயர்ந்த உலோகங்கள், 1 லட்சத்து 13 ஆயிரத்து 655 ரூபாய் மதிப்பிலான 282.62 லிட்டர் மதுபானங்கள், 30 ஆயிரம் மதிப்பிலான 20 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் மாதிரி நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகக் காவல் துறையின் மூலம் ஒரு எப்.ஐ.ஆர்., கலால் விதிகளை மீறிச் செயல்பட்டதற்காகக் கலால் துறையின் சார்பில் 7 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளன.
15 மது கடைகளுக்கு சீல்
ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருந்த 15 மதுபானக் கடைகளுக்கு கலால் துறை அதிகாரிகளால் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
புகார்களுக்கு உடனடி தீர்வு
தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்க cVIGIL என்ற கைபேசி செயலியும், 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவையும் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை cVIGIL செயலி வாயிலாகப் பெறப்பட்ட 5 புகார்களும், 1950 கட்டணமில்லாத் தொலைபேசி எண் மூலமாகப் பெறப்பட்ட 86 புகார்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனைத்துப் புகார்களுக்கும் உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
