/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி மருத்துவ அதிகாரியிடம் ரூ.56 லட்சம் 'அபேஸ்'
/
மாஜி மருத்துவ அதிகாரியிடம் ரூ.56 லட்சம் 'அபேஸ்'
ADDED : நவ 24, 2024 04:41 AM
புதுச்சேரி : ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரியிடம், 56 லட்சத்தை அபகரித்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 36 லட்சம் ரூபாயை இழந்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடந்த நிலையில், மோசடி பேர்வழிகள் பணம் அனுப்ப சொன்னால் மீண்டும் அனுப்பக்கூடாது' என, அவரிடம் போலீசார் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், மருத்துவ அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், ரூ.20 லட்சம் ஜி.எஸ்.டி., செலுத்தினால், 1 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்தனர். இதை நம்பிய அவர் மீண்டும் 20 லட்சம் அனுப்பி ஏமாந்தார். மொத்தத்தில் அவர் 56 லட்சம் ரூபாயை இழந்தார்.
அதேபோல், புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவரை மோசடி கும்பல் தொடர்பு கொண்டு, மும்பையில் இருந்து சைபர் கிரைம் போலீசார் பேசுவதாக தெரிவித்தனர். அவரது பெயரில் வந்த பார்சலில் போதைப்பொருள் சென்றதாக கூறி மிரட்டினர். இதில் பயந்து போனவர், ரூ.14 ஆயிரத்து, 330 அனுப்பி ஏமாந்தார்.
இளைஞர் ஒருவருக்கு, அவரது காதலியின் பெயரில், பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து செய்தி ஒன்று வந்தது. அதில், தனக்கு உடனடியாக 200 டாலர் வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இதை நம்பிய அந்த இளைஞர், 100 டாலர் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.
இளைஞர் ஒருவரிடம், வீட்டில் இருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, சிலர் கூறி டெலிகிராம் 'லிங்க்'கை அனுப்பினர். இதை அவரும் 'கிளிக்' செய்து விவரங்களை அனுப்பி வைத்தார். அவரது அக்கவுண்ட்டில் இருந்து உடனடியாக, 1 லட்சம் ரூபாய் காணாமல் போனது.
அதேபோல இளைஞர் ஒருவரின் கிரெடிட் கார்டு தொகையை அதிகரித்து தருவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து 39 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவரிடம் தனியார் வங்கியில் இருந்து 5 லட்சத்தை குறைந்த வட்டிக்கு வாங்கி தருவதாக மர்ம நபர் கூறியதை நம்பி, செயல்முறை கட்டணம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட காரணங்களுக்கு, 85 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.