/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி நகை அடகு வைத்து ரூ. 85 ஆயிரம் மோசடி
/
போலி நகை அடகு வைத்து ரூ. 85 ஆயிரம் மோசடி
ADDED : ஏப் 10, 2025 04:11 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் போலி நகையை அடகு வைத்து, 85 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பாரதி வீதியை சேர்ந்தவர் அசோக்குமார், 45. இவர், புதுச்சேரி - கடலுார் சாலை முதலியார்பேட்டையில், அசோக் பேங்கர்ஸ் என்ற நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி அசோக்குமார் வெளியே சென்றிருந்த நிலையில், ஊழியரான முதலியார்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி கடையில் இருந்துள்ளார்.
அப்போது, முதலியார்பேட்டை பழைய மார்க்கெட் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், 16 கிராம் செயினை அடகு வைத்து, அதற்கு ஈடாக 85 ஆயிரம் ரூபாய் பெற்று சென்றார். பின், கடைக்கு வந்த அசோக்குமார், அடகு வைத்து விட்டு சென்ற நகையை சோதனை செய்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கார்த்தி அளித்த முகவரிக்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. அவரை பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அசோக்குமார் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.