UPDATED : நவ 04, 2026 09:41 PM
ADDED : நவ 04, 2026 08:54 PM
புதுச்சேரி: தனியார் நிறுவனத்தில், 1.36 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் கலைச்செல்வன், 40, மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி, வடமங்கலத்தில் 'ஹிந்துஸ்தான் யூனிலீவர்' நிறுவனத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவில் சீனியர் மேலாளர் கலைச்செல்வன். இவர், நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை, தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு லாரிகள், கண்டெய்னர்கள் மூலம் அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், நிறுவனத்தில் நிதி குறித்த கணக்கு வழக்குகளை சரி பார்த்தபோது, கலைச்செல்வன், 2025 ஜூன் முதல், 2026 செப்டம்பர் வரை, உற்பத்தி பொருட்களை, பல மாநிலங்களுக்கு அனுப்பியதாக, போலியாக லாரி வாடகை பில் தயாரித்து, 1.36 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.
நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி பிரதீஷ் புகாரின்படி, நேற்று முன்தினம், புதுச்சேரி போலீசார், கலைச்செல்வன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
