ADDED : ஏப் 11, 2026 05:28 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 6 பேரிடம், 95 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபரை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்டார். தொடர்ந்து, வர்த்தகத் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என, ஆசை வார்த்தைகளைக் கூறினார்.
அதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். முதலீடு செய்த பின், தனது கணக்கில் காட்டிய லாபத் தொகையை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர், ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் திருக்கனுாரை சேர்ந்த நபர் 35 ஆயிரத்து 500 ரூபாய், அரியூர் நபர் 4 ஆயிரம், ரெட்டியார்பாளையம் நபர் 3 ஆயிரம், லாஸ்பேட்டை நபர் ஆயிரம், ரெட்டியார்பாளையம் நபர் ஆயிரத்து 850 ரூபாய் என, மொத்தம் 6 பேர் 95 ஆயிரத்து 350 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன்லைன் மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
