/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் மணலுடன் ஆற்று மணல் கலந்து விற்பனை
/
கடல் மணலுடன் ஆற்று மணல் கலந்து விற்பனை
ADDED : பிப் 17, 2024 11:28 PM
புதுச்சேரியில் கடற்கரையில் மணலை திருடி, ஆற்று மணல் என, விற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பணிக்கு கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இருந்து லாரிகளில் மணல் கொண்டு வருவது குறைந்துவிட்டது.
மணல் பற்றாக்குறையால் சில கும்பல், கடற்கரை பகுதிகளில் மணலை அள்ளி, ஆற்றுமணலுடன் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மணலை கொண்டு நடக்கும் கட்டுமானங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
கலப்பட மணல் கண்டுபிடிப்பது எப்படி?
ஆற்றுமணலுடன் கடல் மண் கலந்திருந்தால், அந்த மண்ணை நாக்கில் வைத்து பார்த்தால் உப்பு தன்மை இருக்கும். உப்புத் தன்மை இருந்தால் அது கலப்பட ஆற்றுமண். ஆற்று மணலில் களிமண் கலப்பதை கண்டுபிடிக்க ஒரு குவளையில் மணலை போட்டு உப்பு கலந்த தண்ணீரை ஊற்றி 20 நிமிடம் வைத்தால் களிமண் மேலே மிதக்கும்.
என்ன பாதிப்பு?
பொதுப்பணித்துறை அதிகாரி கூறும்போது, 'கலப்பட மணலை வைத்து கட்டப்படும் கட்டடம் உறுதித்தன்மையை இழந்து விடும். குறிப்பாக, சிமென்ட், மணல் கலந்து சுவரில் பூசும் போது, அந்த சுவர்களில் சில நாட்களிலேயே விரிசல் ஏற்படும். கான்கிரீட் கூரை போடும் போது வலுகுறைந்து விடும்.
கடல் மண் கலந்து மேற்கூரை கட்டியிருந்தால், அந்த மணலின் உப்புதன்மையால் சில ஆண்டுகளில்கான்கிரீட் சுவரில் விரிசல் ஏற்படும். சில நேரங்களில் கட்டடங்கள் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது.
கலப்பட மணல் பயன்படுத்தி தளம் அமைக்கும் போது தளம் சீக்கிரமே விரிசல் ஏற்பட்டு தகர்ந்து விடும். கட்டடத்தின் ஆயுள் காலம் 40 வருடம் என்றால், 20 வருடங்கள் கூட தாக்கு பிடிக்காது. எனவே, ஆற்று மணலா அல்லது கடற்கரை மணலா என்பது உஷாராக பார்த்து வாங்க வேண்டும்' என்றார்.