சேலம் வாலிபர் மீது தாக்குதல் 3 சிறுவர் உட்பட 8 பேர் கைது
சேலம் வாலிபர் மீது தாக்குதல் 3 சிறுவர் உட்பட 8 பேர் கைது
UPDATED : அக் 06, 2026 11:31 PM
ADDED : அக் 06, 2026 08:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்தவர் ரஜினி,28; பெயிண்டர்; வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள தமிழ் சங்க கட்டடத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக, தனது சகோதரர் அருள்பிரகாசம் மற்றும் செழியன், அஜித் ஆகியோருடன் வந்திருந்தார். அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
அஜித்தின் உறவினரான சேலத்தை சேர்ந்த பிரவீன் அவரை அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம். கடந்த 4ம் தேதி இரவு அஜித், பிரவீன் ஆகியோர் மது குடித்தனர். இதனை ரஜினி, செழியன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பும் தாக்கி கொண்டனர். அப்போது பிரவீன் தனது கூட்டாளிகளை அழைத்து வருவதாக மிரட்டி சென்றார்.
பெரிதாகும் என கருதிய ரஜினி, செழியனை சேலத்திற்கு அனுப்பி வைத்தார். இதனிடையே அங்கு வந்த பிரவீன் உள்ளிட்ட பத்து பேர் செழியன் எங்கே என கேட்டனர்.
அவர் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ரஜினி, அருள்பிரகாசம் உள்ளிட்டோரை, கட்டை, இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களால் சரமாரியாக தாக்கியது. அருள்பிரகாசம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை கண்ட பிரவீன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பி சென்றார்.
உடனே அருள்பிரகாசத்தை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரஜினி பெரியகடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக கருவடிக்குப்பம், சித்தானந்தா நகர் சங்கர் மகன் மதன்,18; செயின்ட்பால்பேட் சுரேஷ் மகன் ராகவன்,18; சேலம், கோனேரிபட்டி மணி மகன் அஜித் (எ) பானையன்,22; கருவடிக்குப்பம் மோகன்ராஜ் மகன் மணி (எ) ஸ்டீபன்,28; சுரேஷ் குமார் மகன் திலிப்பாபு,33; மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
தப்பியோடி பிரவீனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 5 பேரை காலாப்பட்டு மத்திய சிறைக்கும், மூன்று சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய கருவடிக்குப்பம் பாலாவை,18, இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, ஆபரேஷன் 'கேங் ஹண்ட்டில்' ஏற்கனவே லாஸ்பேட்டை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
