பள்ளி, கல்லுாரி வாகனங்கள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
பள்ளி, கல்லுாரி வாகனங்கள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 31, 2026 05:14 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய கல்வி நிறுவன வாகனங்களுக்கான தர ஆய்வு முகாமில் பங்கேற்ற 178 வாகனங்களில் 132 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது. ஜி.பி.எஸ்., கருவி பழுது உள்ளிட்ட காரணங்களால் 46 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
புதுச்சேரியில், கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனையொட்டி, போக்குவரத்து துறை சார்பில், பள்ளி, கல்லுாரி வாகனங்களின் தர ஆய்வு இரண்டு நாள் முகாம் மேட்டுப்பாளையம், போக்குவரத்து முனையத்தில் நேற்று துவங்கியது.
முகாமை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் அமன் சர்மா தலைமையில் போக்குவரத்து பணிமனை செயற்பொறியாளர் சீத்தராமராஜூ, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பிரபாகர் ராவ், அங்காளன், ரமேஷ், வாகன ஆய்வாளர்கள் சீனிவாசன், பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் மொத்தம் 1,060 பள்ளி வாகனங்கள் உள்ளன. நேற்றைய ஆய்வில் 172 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு வாகனங்களாக தகுதி சான்றிதழ், காப்பீடு, அனுமதி சீட்டு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசரகால கதவுகள், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ்., மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவை உள்ளனவா என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும், மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்து விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் உடனே பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
முழுமையான ஆய்வுக்கு பிறகு தகுதியுள்ள 132 வாகனங்களுக்கு அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஜி.பி.எஸ்., கருவி, பாதுகாப்பு கருவிகள் இல்லாதது, அவசர கால வழி சரியாக திறக்காதது உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக 46 வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
அந்த வாகனங்களில் உள்ள குறைகளை சரி செய்த பிறகு மீண்டும் ஆய்வுக்கு வருமாறு அறிவுறுத்தினர். ஆய்வு பணி இரண்டாம் நாளாக இன்றும் நடக்கிறது.
