தேசியக்கொடியை ஏற்ற வைத்து மாணவனை கவுரவப்படுத்திய பள்ளி
தேசியக்கொடியை ஏற்ற வைத்து மாணவனை கவுரவப்படுத்திய பள்ளி
ADDED : ஆக 18, 2026 08:43 PM

புதுச்சேரி: சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையில், முதலிடம் பிடித்த வ.உ.சி., அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களை கவுரவப்படுத்தும் நோக்கில், அணிவகுப்பிற்கு தலைமை ஏற்ற, மாணவனை கொண்டு, பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
புதுச்சேரியில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில், புதுச்சேரி வ. உ. சி., அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் ஐயப்பன் தலைமை ஏற்று நடத்திய அணிவகுப்பு மரியாதைக்கு முதலிடம் கிடைத்தது. இதில் பங்கேற்ற மாணவர்களை, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
இந்நிலையில், வ.உசி., அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமை, தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வில், பள்ளி ஆசிரியர்களால் கொடி ஏற்றப்படும் நிலையில், இந்த வாரம் நடந்த நிகழ்வில், அணி வகுப்பில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில், அணி வகுப்பிற்கு தலைமை ஏற்று நடத்திய மாணவன் ஐயப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அணி வகுப்பில் பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளி துணை முதல்வர் சிவராம ரெட்டி, உடற் பயிற்சி ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
