ADDED : மே 29, 2026 05:27 AM
புதுச்சேரி: கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் 4ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது.
அதனையொட்டி அரசு பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் 2026-27ம் கல்வி ஆண்டு துவங்கி, ஓரிரு நாட்கள் வகுப்புகள் நடைபெற்றது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.
அதனையொட்டி வரும் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. கடந்த 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் நேற்று முடிவடைந்தது. இதில் 8 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்த தாக்கம் மேலும் சில தனங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று கேட்டபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறை வரும் ஜூன் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என்றார்.
