ADDED : செப் 22, 2024 01:55 AM
மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பும் போலீஸ் கையில் உள்ளது. ஆனால் அந்த போலீசையே அலறவிடும் சம்பவம் பெரியக்கடையில் அரங்கேறியுள்ளது.
பெரியக்கடை போலீஸ் நிலையம் மற்றும் கிழக்கு எஸ்.பி., அலுவலகம், நேரு வீதியில் உள்ள பலம் இழந்த பிரெஞ்சு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பழங்கால கட்டடம் என்பதால், ஏராளமான சந்து பொந்துகள் உள்ளன. இதில், எலிகள் அதிகம் குடியிருக்கின்றன. இவை போலீஸ் நிலைய ஆவணங்களை அடிக்கடி கடித்து குதறுவதுடன், அங்குள்ள ஜெராக்ஸ் மிஷின் ஒயர்களையும் கடித்து குதறுகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல முறை ஜெராக்ஸ் மிஷின் ஒயர்களை எலிகள் கடித்து குதறி உள்ளன.
இதனால் ரூ.30 ஆயிரம் வரை போலீசார் செலவு செய்து ஜெராக்ஸ் மிஷினை சரி செய்தனர்.
எலி பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது.
இதனால் எலியிடம் இருந்து பாதுகாக்க ஜெராக்ஸ் மிஷினுக்கு இரும்பு கூண்டு ஒன்றை போலீசார் தயார் செய்தனர்.
கிணற்றில் தண்ணீர் இறைக்க ராட்டினத்தில் வாலி தொங்க விட்டிருப்பதுபோல், இரும்பு கூண்டு கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளனர். ஜெராக்ஸ் மிஷின் ஆன் செய்யும்போது, கயிற்றின் மூலம் இரும்பு கூண்டு மேலே துாக்கப்படுகிறது.
பணியை முடித்து ஜெராக்ஸ் மிஷின் ஆப் செய்த பிறகு, கயிற்றை இறக்கி இரும்பு கூண்டால் மூடி, ஜெராக்ஸ் மிஷனை பாதுகாத்து வருகின்றனர்.