/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
/
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
ADDED : ஜூலை 20, 2024 04:36 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கொடுக்கும் வகையில்தனி பிரிவினை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மனிதனாக பிறந்தும் மனிதர்கள் சேர்த்துக் கொள்ள தயங்கும் சபிக்கப்பட்ட சமூகமாக திருநங்கையர்கள் சமூகம் உள்ளது. பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பெற்றோர் முதல் உற்றார், உறவினர்கள் வரை எல்லோராலும் ஒதுக்கப்பட்டு வருந்தி, குடும்பத்தை விட்டு பிரிந்து எங்காவது கண் காணாத இடத்தில் ஒதுங்கி வாழ்கின்றனர்.
இப்படி வாழும் இந்த மூன்றாம் பாலினத்தவரை பற்றி சரியான கணக்கீடு புதுச்சேரியில் இல்லை. அவர்களுக்கான அடையாளம் ஏதும் இல்லை.
புதுச்சேரியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தனி பிரிவினை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சமூக நலத் துறை மூலம் வரைவு விதிமுறைகளை உருவாக்கி வருகின்றது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான தனி அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.
மருத்துவம்
திருநங்கைகள் ஆண்களில் இருந்து பெண்ணா கவும், பெண்களில் இருந்து ஆண்களாகவும் அறுவைசிகிச்சை செய்து கொண்டு மாறுகின்றனர். இவர்களுக்கு தற்போது தனியார் மருத்துவமனையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
இப்போது நான்கு பிராந்தியங்களிலும் ஒரு அரசு மருத்துவமனை மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை செய்யவும், கவுன்சிலிங், ஹார்மோன் மாற்று தெரபி சிகிச்சை, லேசர் தெரபி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதனை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி வார்டும் ஒதுக்கப்பட உள்ளது.
கல்வி
மூன்றாம் பாலினத்தவர் பள்ளி, கல்லுாரிகள் பயிலும்போது அவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களை ராக்கிங்கில் இருந்து பாதுகாக்க குறைகேட்பு பிரிவும் அவர்களுக்காக தனியாக துவங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பள்ளி, கல்வி நிறுவனங்களில் தங்கி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கான வசதியும் செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட உள்ளது.
இதர சலுகைகள்
வீடு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடுகள் கட்டி தருதல், காப்பீடு திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர்த்தல், சுய உதவி குழுக்களை ஏற்படுத்தல், சமூதாய மையங்களை கட்டி தருதல், ரேஷன் கார்டு வழங்கல், மாற்றுதிறனாளி, வயதான மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பென்ஷன் திட்டம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாத பொது போக்குவரத்துகளை ஏற்படுத்தல், வட்டியில்லா கடன் திட்டம், என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் எனவும் வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, சமூகத்தின் புறக்கணிப்புகளைத் தாங்கி, மூன்றாம் பாலினத்தவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து வருகிறார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் புதுச்சேரி அரசு கொண்டு வர உள்ள இத்திட்டங்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.