ADDED : நவ 11, 2026 12:14 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 71 நாட்களில் 10 கொலைகள் நடந்ததை அடுத்து போலீசார் அதிரடி ரோந்து பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் தேதி வரையிலான 71 நாட்களில் 10 கொலைகள் நடந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் தேதி வானரபேட்டையில் நடந்த கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது, புதுச்சேரியின் சட்ட ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி முழுதும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், பெரியகடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டறியும் வகையில் போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவிந்த சாலை, ராஜிவ் காந்தி குவார்ட்டர்ஸ், ஜீவா நகர், ரெயின்போ நகர், அன்னை நகர், குமரகுரு பள்ளம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரவுடிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் மறைவிடங்களாக பயன்படுத்தக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் நேரில் சோதனை நடத்திய போலீசார், நகரின் முக்கிய சந்திப்புகளில் மாலை 5:00 முதல் இரவு 11:00 மணி வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
