தொடர் கன மழையால் நிரம்பி வழியும் செட்டிப்பட்டு தடுப்பணை
தொடர் கன மழையால் நிரம்பி வழியும் செட்டிப்பட்டு தடுப்பணை
UPDATED : அக் 26, 2026 07:51 PM
ADDED : அக் 26, 2026 07:49 PM

புதுச்சேரி: செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, தொடர் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்து வருகிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு- திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் விவசாயிகள் நலன்கருதி தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி மற்றும் கிராமப்புறங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. இதனால் செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை, நிரம்பி வழிந்து வருகிறது.
நிரம்பி வழிந்து வரும் தண்ணீரில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால், செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தடுப்பணை நிரம்பியுள்ளதால், ஆற்றின் இருகரைகளையும், மண் கொட்டி பலப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், தொடர் மழையால் வம்புப்பட்டு ஏரியில் மழைநீர் தேங்கி, வேகமாக நிரம்பி வருகிறது. இதற்கிடையே, ஏரியில் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கட்டை மதகு உயரம் குறைவாக இருப்பதால், ஏரியில் தேங்கிய தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
எனவே, வம்புப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளை ஏரியின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேங்கும் வகையில் உயர்த்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
