/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: தீவாக மாறிய 20 கிராமங்கள்: புதுச்சேரி-கடலுார் சாலை துண்டிப்பு
/
தென்பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: தீவாக மாறிய 20 கிராமங்கள்: புதுச்சேரி-கடலுார் சாலை துண்டிப்பு
தென்பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: தீவாக மாறிய 20 கிராமங்கள்: புதுச்சேரி-கடலுார் சாலை துண்டிப்பு
தென்பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: தீவாக மாறிய 20 கிராமங்கள்: புதுச்சேரி-கடலுார் சாலை துண்டிப்பு
UPDATED : டிச 03, 2024 06:27 AM
ADDED : டிச 03, 2024 06:26 AM

பாகூர்: தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால், பாகூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளது.
பெஞ்சல் புயல் மற்றும் மழை காரணமாக புதுச்சேரி, , பாகூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியது. தென்பெண்ணை ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், சாத்தனுார் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக பகுதியான அழகியநத்தம் கிராமத்தில் புகுந்த தென்பெண்ணையாற்று வெள்ளம், புதுச்சேரி பகுதியாக இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் கிராமங்களை வெள்ளம் புகுந்ததால், 5,000 மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பலர், வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் முகாம் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் இளைஞர்கள் துணையுடன் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு உணவு பொருட்கள் வழங்கி வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பெருக்கை, விட தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அதிகம் என்பதால், பாகூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தனி தனி தீவுகளாக மாறி உள்ளது.
பாகூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஏரி உடையும் அபாயம் ஏற்படலாம் எனவும், இதன் காரணமாக. சேலியமேடு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனை சுற்றியுள்ள சேலியமேடு, அரங்கனுார், குடியிருப்புபாளையம், மேல் அழிஞ்சிப்பட்டு, ரெட்டிச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி -கடலுார் இடையிலான போக்குவரத்து, விழுப்புரம் - -நாகப்பட்டினம் புறவழிச் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
பாகூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் தனித்தனியாக ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினர்.