கடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் கன்னிகள் கலங்கடிக்கும் ஷாக் ரிப்போர்ட்
கடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் கன்னிகள் கலங்கடிக்கும் ஷாக் ரிப்போர்ட்
ADDED : ஏப் 19, 2026 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி என்றாலே நம் நினைவுக்கு வருவது அமைதியான கடற்கரையும், பிரெஞ்சு கட்டடங்களும் தான். ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஒரு சைலண்ட் மர்டர் நடந்து கொண்டிருப்பது பலருக்குத் தெரிவதில்லை.
கொலையாளி யார் தெரியுமா.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தான். வரிசையாக இந்த பிளாஸ்டிக் கன்னி வெடிகள் கடலுக்குள் தினமும் டன் கணக்கில் சென்று கொண்டிருக்கின்றன.
புதுச்சேரியின் கழிவுநீர் வாய்க்கால்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், எந்தப் பரிசோதனையும் இன்றி நேராகக் கடலில் சங்கமிக்கின்றன. இது ஏதோ தண்ணீர் ஓடும் பாதை அல்ல. கடலின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறு.
இங்கேதான் சோகமான சம்பவமும் அந்த மர்டரும் சைலண்டாக நடந்து வருகின்றது. கடலில் வாழும் ஆமைகளுக்கு ஜெல்லி மீன்கள் என்றால் உயிர். ஆனால், தண்ணீரில் மிதக்கும் பாலித்தீன் பைகள், அப்படியே ஜெல்லி மீன்களைப் போலவே உருமாறி நிற்கின்றன. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பாவம், பசியில் இருக்கும் ஆமைகள் அந்தப் பைகளை ஜெல்லி மீன் என நினைத்து விழுங்குகின்றன. அடுத்த சில மணி நேரங்களில், அந்த ஆமைகளின் மூச்சுக் காற்று பிளாஸ்டிக்கால் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.
திப்புராயபேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிதவை தடுப்புகள் இப்போது ஹீரோவாகச் செயல்பட்டு வருகின்றன. கடலுக்குள் நுழையப் பார்க்கும் பிளாஸ்டிக் தீவிரவாதிகளை இவை எல்லையிலேயே தடுத்து நிறுத்துகின்றன.
ஆனால், இது ஒரு தற்காலிக அரண் தான். இது ஒரு வகையில் ஆறுதல் அளித்தாலும், ஊற்றுக்கண்ணை அடைக்காமல் ஓட்டையை அடைத்து என்ன பயன் என்பதே கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த விவகாரத்தில் அரசை மட்டும் குறை சொல்லி தப்பிக்க முடியாது. குப்பையைத் தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்காமல், நைசாக சாக்கடையில் தள்ளிவிடும் ஒவ்வொரு கையும் இந்தக் கொலைக்கு உடந்தைதான். நாம் வீசும் ஒரு மிட்டாய் பேப்பர் கூட, ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மரண சாசனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதற்கு முடிவு கட்டாயம் எடுக்க வேண்டும்.
கடல் மாசுபடுவது என்பது ஏதோ தூரத்தில் நடக்கும் பிரச்னை அல்ல. கடலில் சேரும் பிளாஸ்டிக், நுண் துகள்களாக மாறி மீண்டும் மீன்கள் வழியாக நம் உணவுத் தட்டிற்கே வருகிறது. நாம் எதை எறிந்தோமோ, அதையே இயற்கை நமக்குத் திருப்பித் தருகிறது...விஷமாக...
அரசு நிர்வாகம் இரும்புக்கரம் கொண்டு தடுப்பது ஒருபக்கம் இருந்தாலும் நாமும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். இந்தக் கேள்விக்கான விடை நம் ஒவ்வொருவரின் குப்பைத் தொட்டியிலும் இருக்கிறது.
அங்கு குப்பைகளை போட்டாலே போதும். எல்லாமே சரியாகவே நடக்கும் என்கின்றனர். என்ன கேட்பீர்களா...
