ADDED : நவ 17, 2024 02:34 AM
அழகிய கடற்கரை ஏராளமான சுற்றுலா தளங்கள் கொண்ட புதுச்சேரியை காண நாட்டின் பல பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு நிலவும் 'டிராபிக்' பிரச்னையால் சுற்றுலா பயணிகள் வருகை குறையத் துவங்கி உள்ளது.
இதனை உணர்ந்த புதுச்சேரி அரசு 'டிராபிக்' பிரச்னைக்கு மூல காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தது. கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை, போலீஸ் இணைந்து கடந்த 4ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் செயல் வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் வந்தால் தான் வியாபாரம் நடக்கும். வருவதற்கே வழியின்றி சாலையை ஆக்கிரமித்து கொண்டால் எதிர்காலத்தில் மக்கள் கடைகளுக்கு நேரடியாக வருவதற்கு பதில் ஒட்டுமொத்த பொருட்களையும் ஆன்லைனில் வாங்க பழகிக்கொள்வர்.
புதுச்சேரி சின்னஞ்சிறிய நிலப்பகுதி. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என்பதை விட, அரசு தன்னுடைய இடத்தை காப்பாற்றி கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கை எனலாம்.
அரசு இடத்தை கூட ஒரு தனி நபர் 15 ஆண்டிற்கு மேலாக கட்டுமானம் கட்டி அனுபவித்து விட்டால் அனுபவ சொந்தமாக மாறிவிடும். புதுச்சேரி சாலையில் பல அடி துாரம் வரை கட்டுமானங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு முறைப்படி பட்டா வாங்கி விடுவர். அவ்வாறு பட்டா வாங்கி விட்டால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனால் அரசு ஒவ்வொரு ஆண்டும், தனது சொத்தான சாலையை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக தடுத்திட, அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்ய முடியும். பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள், தங்கள் பராமரிப்பில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு, ஆக்கிரமிப்புகளை 15 நாளில் அகற்றிக் கொள்ள முறைப்படி நோட்டீஸ் வழங்கலாம். காலக்கெடுவிற்குள் ஆக்கிரமிப்பை அகற்றாத கடையின் உரிமத்தை ரத்து செய்து, மின் இணைப்பை துண்டித்தால் போதும்.
சிலர் சாலையை ஆக்கிரமித்து பெட்டிக்கடை உள்ளிட்டவை நடத்துகின்றனர். இத்தகைய நபர்களின் ஆக்கிரமிப்பு பொருட்களை மொத்தமாக அள்ளிச் சென்று அபராதம் விதித்தால், அடுத்த முறை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்ய தயங்குவர்.
இப்படி அதிகாரிகள் பாரபட்சமின்றி வேலை செய்தால், ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளையும் ஒழித்து விடலாம்.