ADDED : மார் 24, 2026 10:58 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுதாகர் நகர், அஜீஸ் நகர் பகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளும் பணிகளை பட்டியலிட்டு காங்., வேட்பாளர் சிவசங்கர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில், மனு தாக்கல் செய்துள்ள சிவசங்கர் எம்.எல்ஏ., தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று உழவர்கரை தொகுதிக்குட்பட்ட சுதாகர் நகர், அஜீஸ் நகர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை செய்து காங்., வேட்பாளர் சிவசங்கர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதில், கடந்த 5 ஆண்டுகளாக சுதாகர் நகர், அஜீஸ் நகர் பகுதிகளில் மேற்கொண்ட மக்கள் நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டும், மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தது போன்று, அடுத்த 5 ஆண்டுகள் அப்பகுதியில் மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டப் பணிகளை விளக்கி கூறி தன்னை வெற்றி பெற செய்ய 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
