/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணையாற்றங்கரையில் மண் அரிப்பு சரி செய்யும் பணி
/
தென்பெண்ணையாற்றங்கரையில் மண் அரிப்பு சரி செய்யும் பணி
தென்பெண்ணையாற்றங்கரையில் மண் அரிப்பு சரி செய்யும் பணி
தென்பெண்ணையாற்றங்கரையில் மண் அரிப்பு சரி செய்யும் பணி
ADDED : டிச 15, 2024 05:39 AM

பாகூர் : தினமலர் செய்தி எதிரொலியால், கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த 2011ம் ஆண்டு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அரைகுறையாக நடந்ததால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அணைக்கட்டு உடைவதும், தரை பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் கரைபகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
ஆனால், பராமரிப்பு, பழுபார்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் தடுப்பணையின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, மண் அரிப்பு காரணமாக 100 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் உள்ளே சென்று விட்டது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் நீரில் அடித்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டது.
இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், குடியிருப்புகளை ஓட்டி உள்ள பகுதியில் மேலும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மரக்கட்டைகள், மண் மூட்டைகளின் மூலமாக மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றின் நீரோட்டத்தின் வேகம் சற்று குறைந்த பின், உடைப்பு ஏற்பட்ட கரை சீரமைக்கபட உள்ளது.