ஓட்டு எண்ணிக்கையின் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் போலீசாருக்கு எஸ்.பி., வம்சிதர ரெட்டி அறிவுரை
ஓட்டு எண்ணிக்கையின் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் போலீசாருக்கு எஸ்.பி., வம்சிதர ரெட்டி அறிவுரை
ADDED : ஏப் 24, 2026 08:09 PM

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம், வடக்கு எஸ்.பி., அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கான குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
எஸ்.பி., வம்சிதர ரெட்டி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பாலமுருகன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மேட்டுப்பாளையம், தன்வந்தரி நகர், லாஸ்பேட்டை, சேதராப்பட்டு, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
இதில், எஸ்.பி., வம்சிதரரெட்டி பேசுகையில், 'புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, எந்தவித அசம்பவிதங்களும் நடைபெறாத வகையில், பாதுகாப்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, வரும் 4ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
மேலும், உள்ளூர் ரவுடிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதுடன், வெளியூர் ரவுடிகள் யாரேனும் புதுச்சேரியில் தங்கியுள்ளனரா என, ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், கோரிமேடு போலீஸ் சமுதாய கூடத்தின் வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், கடும் பணிசுமை ஏற்பட்டு வருகிறது. அதனை சரி செய்ய புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு பணியிடங்களை ஒதுக்க வேண்டும். கடந்த 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை வைத்தனர்.
போலீசாரின் கோரிக்கைகளை, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதியளித்தார்.
