ADDED : ஏப் 13, 2026 07:07 PM

பாகூர்: கன்னியக்கோவிலில் வேகத்தடைகளின் மீது பூசப்பட்டிருந்த வெள்ளை வண்ணம், நிறம் அழிந்து விட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவில் -- மணப்பட்டு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இச்சாலை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுபிக்கப்பட்டது. சாலையில், விபத்துக்களை தவிர்க்கும் வகையில், முக்கிய இடங்களில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது அடிக்கப்பட்ட வெள்ளை கோடுகள் 2 ஆண்டுகள் முன்பு நிறமிழந்து விட்டது. இது குறித்து பல முறை பொதுப்பணித்துறையின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், வேகத்தடை இருப்பது சரியாக தெரியாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மணப்பட்டு மூ.புதுக்குப்பம் கடற்கரை சுற்றுலா மையத்திற்கு செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள், வேகத்தடைகளால் விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, கன்னியக்கோவில் -- மணப்பட்டு சாலையில் உள்ள வேகத்தடைகளின் மீது பிரதிபலிக்கும் வர்ணம் பூசிடவும், எச்சரிக்கை பலகைகள் அமைத்திடவும், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
