ADDED : ஜூன் 15, 2026 10:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெஸ்ட்மேட் மருத்துவமனை சார்பில், விளையாட்டு ஆணைய ஊழியர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம், உப்பளத்தில் உள்ள ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்து.
விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
மருத்துவ முகாமினை புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் சுதாகர் தலைமை தாங்கி துவக்கி வைத்து பரிசோதனையும் செய்து கொண்டார். தொடர்ந்து வெஸ்ட்மேட் மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் அருள்மணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஊழியர்களை பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
பங்கேற்ற ஊழியர்களுக்கு சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம் மற்றும் இ.சி.ஜி உள்ளிட்ட அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டன. விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக அதிகாரி குருநாதன் மற்றும் விளையாட்டுப் பள்ளியின் முதல்வர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
