புதுச்சேரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கவேண்டும்: தி.மு.க., மாணவர் அணி வலியுறுத்தல்
புதுச்சேரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கவேண்டும்: தி.மு.க., மாணவர் அணி வலியுறுத்தல்
UPDATED : நவ 23, 2026 07:04 PM
ADDED : நவ 23, 2026 07:04 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., மாணவரணி கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் கண்ணன், ஸ்டீபன் ராஜ், தமிழ்மகள், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், மாநில மற்றும் தொகுதி மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தி.மு.க., இளைஞர் அணிச் செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டலின் பிறந்த நாளை மாணவர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர் கல்வி வரை கல்விச் செலவை ஏற்கும் வகையில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சென்டாக் சேர்க்கையை காலத்தோடு நடத்த வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிகளவில் தோல்வி அடைவது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். புதுச்சேரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசின் அங்கீகாரப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 35 விளையாட்டுகளை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
