மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் மாநில அளவிலான பொதுநல வழக்கு போட்டி
மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் மாநில அளவிலான பொதுநல வழக்கு போட்டி
UPDATED : அக் 26, 2026 06:57 PM
ADDED : அக் 26, 2026 06:54 PM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் மாநில அளவிலான பொதுநல வழக்குப் போட்டி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ராஜராஜன் மற்றும் துணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் முதல்வர் மற்றும் இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
இப்போட்டியின் முதற்கட்ட சுற்று இணையவழியில் நடத்தப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 சட்டக் கல்லுாரி அணிகள் பதிவு செய்து பங்கேற்றன. அவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மிகச் சிறந்த 15 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 அணிகளுக்கான நேரடி இறுதிச் சுற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இறுதிச் சுற்றுக்கு நடுவர்களாக, இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விக்னேஷ் மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரியின் பேராசிரியர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் சட்ட நுணுக்கங்கள் மற்றும் வாதத்திறனை மதிப்பீடு செய்தனர்.
இந்த விவாதப் போட்டியில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லுாரியைச் சேர்ந்த ஜோதிக் கிருத்திக் முதல் பரிசையும், கிருத்திகா இரண்டாம் பரிசையும், கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லுாரியின் ஆதித்யா மூன்றாம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சட்டக் கல்லுாரியின் டீன் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரிப் பேராசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
