/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில சமூக நல வாரியம் மூடல்: ஊழியர்கள் இடமாற்றம்
/
மாநில சமூக நல வாரியம் மூடல்: ஊழியர்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 27, 2024 02:38 AM

இந்தியாவில் மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், கடந்த 1953ம் ஆண்டில், மத்திய சமூக நல வாரியத்தை ஏற்படுத்தி திட்டங்களை செயல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியிலும் மாநில சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
இத்தகைய பழமைவாய்ந்த மாநில சமூக நல வாரியம் முற்றிலும் மூடப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் கடைசியாக எஞ்சியுள்ள ஊழியர்கள் பாண்கேர், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நலிந்த, விளிம்பு நிலையில் உள்ள ஏழை பெண்களுக்கு கைகொடுக்க மத்திய சமூகநலத் துறை அதிக நிதி ஒதுக்கியது. இதனால் புதுச்சேரி சமூக நலத் துறையின் பட்ஜெட் 25 லட்சமாக உயர்ந்து இருந்தது.
பொருளாதாரரீதியாக பின்தங்கிய மகளிருக்கு வட்டியில்லாமல் மானிய விலையில் கறவை மாடு வழங்கல், மகளிர் சுய உதவிகளுக்கு கம்ப்யூட்டர், டைப் ரைட்டிங் கற்றுக் கொடுத்தல், வேலைக்கு போகும் பெண்களின் குழந்தைகளுக்கான கிரஷ் நடத்துவது என பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
படிப்படியாக, புதிய துறைகள் உருவான பிறகு சமூக நல வாரியம் தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்க துவங்கியது. குறிப்பாக சமூக நலத் துறையும், மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் உருவான பிறகு சமூக நல வாரியத்தின் பணிகள் குறைய துவங்கின.
சமூக நல வாரியத்தில் இருந்த மகளிர், குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் இத்துறைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. அதே வேளையில், மத்திய அரசும், மத்திய சமூக நல வாரியத்தை மூட கடந்த 2023 ஏப்., 6ம் தேதி அமைச்சரவையில் முடிவு செய்து, ஊழியர்களுக்கு பில்லை செட்டில் செய்தது.
அதேபோன்று மாநிலங்கள், யூனியன் தேசங்களுக்கும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், மத்திய சமூக நல வாரியத்தை மூட மத்திய நிதித் துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இனி புதுச்சேரி சமூக நல வாரியத்துக்கு நிதி, நிர்வாகம், சேவை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது.
மேலும், மாநில சமூக நல வாரியத்தில் பணியாற்றுவோரை மத்திய அரசின் திட்டங்கள் அல்லது மாநில அரசின் திட்டங்களின் கீழ் மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக எந்தவித செயல்பாடு இல்லாமல் இருந்த மாநில சமூக நல வாரியத்தை அரசு மூட அறிவிப்பு செய்து, அங்கு பணிபுரிந்து ஊழியர்களையும் இடமாற்றம் செய்துள்ளது.