/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல்
/
புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல்
புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல்
புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல்
ADDED : பிப் 13, 2025 04:58 AM

புதுச்சேரி: புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். அதன்படி புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடுதல் செலவினத்திற்காக கூடியது.
சட்டசபை நிகழ்வில் பங்கேற்க பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் ஒன்றாக வந்தனர்.
திடீரென சட்டசபைக்குள் செல்லாமல், மைய மண்டப நுழைவு வாயில் முன்பு படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், புதுச்சேரிக்கு புதிய மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம். புதுச்சேரி மக்களை மதுபான தொழிற்சாலைகளிலிருந்து காப்பாற்று எனக்கூறி கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பின், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் ஆகியோர் கூறியதாவது:
மாநிலத்தில் மக்களை பாதிக்கும் 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளனர். இதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெற உள்ளனர். ஆளும்கட்சியாக இருந்தாலும், புதுச்சேரி மக்களை பாதிக்கும் குடிநீர் ஆதாரத்தை நிர்மூலமாக்கும் மதுபான ஆலைகள் புதுச்சேரிக்கு தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. புதுச்சேரிக்கு மதுபான ஆலைகள் வரவேக்கூடாது. மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட காமராஜர் நகரில் அனைத்து வீடுகளிலும் வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். சட்டசபையில் கூடுதல் செலவினங்களுக்கு மட்டும் அனுமதி பெறக்கூடாது. 10 நாட்கள் சபையை நிகழ்த்த வேண்டும். பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைக்கப்பட்ட பஸ் நிலையத்துக்கு மோடி பெயர் சூட்ட வேண்டும்.
கவர்னர், முதல்வர், அமைச்சரிடம் மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்துள்ளோம். பா.ஜ.,வில் 6 எம்.எல்.ஏ., க்கள் உள்ளோம். அமைச்சர் சாய்சரவணக்குமார் மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
எனவே பா.ஜ.,வில் மெஜாரிட்டியாக உள்ள 4 எம்.எல்.ஏ.,க்கள் மதுபான ஆலைக்கு எதிராக உள்ளோம். பா.ஜ.,வில் பிரிவினை என்பதே இல்லை. மதுபான கொள்கையைத்தான் எதிர்க்கிறோம்' என்றனர்.
தொடர்ந்து மதுபான ஆலை புதுச்சேரிக்கு வேண்டாம் என கோஷம் எழுப்பியபடி சட்டசபைக்கு வந்து சபை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
மாநிலத்தில் வருவாய் வரி வருவாய்-4452 கோடி, வரி இல்லாத வருவாய்-2922.64 கோடி என, 7,374 கோடி திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு அனுப்பி உள்ளது. வரி வருவாயில் வணிக வரி மூலம்-2,400 கோடி, கலால்-1,700, பத்திர பதிவு-150 கோடி, போக்குவரத்து-200 கோடி, இதர வரியில் 2 கோடிகிடைக்கிறது.
வரி இல்லாத வருவாயை பொருத்தவரை மின் துறையில்-2,520 கோடி, பொதுப்பணித் துறை-45 கோடி, வட்டி, கட்டணம் என்ற வகையில் 357.64 கோடி கிடைக்கிறது. இருப்பினும், அதிகரித்துள்ள அரசின் நலத்திட்ட செலவினங்களை சமாளிக்க புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து அதன் வாயிலாக வருவாயை அதிகரிக்கலாம் என, திட்டமிட்டுள்ளது.
ஆனால், ஆட்சியில் பங்கு வகிக்கும் பா.ஜ., புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் அமைச்சரவையில் சாய்சரவணன் கருத்து தெரிவித்த சூழ்நிலையில், அடுத்து சட்டசபை வளாகத்திலும் பா.ஜ., எம்.எல்.ஏக்கள், ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி போராட்டம் நடத்தியுள்ளதால் என்.ஆர்.காங்.,க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கூட்டணியில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்குமா அல்லது கைவிடுமா என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு என்.ஆர்.காங்., தள்ளப்பட்டுள்ளது.