ADDED : டிச 07, 2024 07:11 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் பாட்மிண்டன் பயிற்சி மேற்கொண்ட மாணவர் மின்சாரம்தாக்கி காயமடைந்தார்.
புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவியர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி விடுதியில் தங்கி, உள்விளையாட்டு அரங்கில் பாட்மிண்டன் பயிற்சி மேற்கொண்டு வந்த ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திக், 15; நேற்று பயிற்சி முடித்து, அரங்கின் மின் விளக்கு சுவிட்சை ஆப் செய்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உள்விளையாட்டு அரங்கில் மாணவர், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.