/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் போராட்டம்: பேராசிரியர் நீக்கம்
/
மாணவர்கள் போராட்டம்: பேராசிரியர் நீக்கம்
ADDED : அக் 12, 2025 04:41 AM
புதுச்சேரி : பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, காரைக்கால் வளாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பல்கலையின், காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர், தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது.இதற்கிடையே, புதுச்சேரி மத்திய பல்கலையிலும், மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்தது.
பல்கலையில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9ம் தேதி துணைவேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு நீடித்ததால், காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி, 20 மாணவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்த சென்றனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.