/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளம் மாணவர்கள், நோயாளிகள் மீட்பு
/
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளம் மாணவர்கள், நோயாளிகள் மீட்பு
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளம் மாணவர்கள், நோயாளிகள் மீட்பு
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளம் மாணவர்கள், நோயாளிகள் மீட்பு
ADDED : டிச 04, 2024 08:24 AM

பாகூர் : புதுச்சேரி அருகே தனியார் மருத்துவக் கல்லுாரியில் வெள்ளம் புகுந்ததால் தத்தளித்த மாணவர்கள், நோயாளிகள் மற்றும் ஊழியர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், புதுச்சேரி மாநிலம், பாகூரில் உள்ள ஏரி நிரம்பி, நேற்று முன்தினம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், பாகூரை அடுத்துள்ள அரங்கனுார், சேலியமேடு, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் மற்றும் தமிழகம் மற்றும் ரெட்டிச்சாவடி கிராமங்களில் நேற்று வெள்ளம் புகுந்தது. இதில் கிருமாம்பாக்கத்தில் புகுந்த வெள்ளம், கடலுார்-புதுச்சேரி சாலையை ஒட்டியுள்ள ஆறுபடைவீடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புகுந்தது.
இதனால், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்ற வந்த பலர் நேற்று காலை முதல் டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறினர்.
இந்நிலையில் மதியத்திற்கு மேல் மருத்துவமனை வளாகத்தில் 4 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், இம்மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் மருத்துவம், செவிலியர் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி விடுதிகளில், தங்கி படித்து வரும் 350 மாணவ, மாணவிகளும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.
அவர்களை, மருத்துவமனை ஊழியர்கள் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரங்களில் ஏற்றி கல்லுாரியில் மேடான பகுதியில் நிறுத்தினர். அவர்களை, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் மீட்டு, சாலைக்கு கொண்டு வந்தனர்.
பின், மாணவர்களை ஜிப்மர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக விடுதிகளில் தங்க வைத்தனர். உள்நோயாளிகள் 15 பேரையும் பிற மருத்துவமனைகளில் சேர்த்தனர்.