/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மாணவியின் தாய்மாமன் கைது
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மாணவியின் தாய்மாமன் கைது
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மாணவியின் தாய்மாமன் கைது
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மாணவியின் தாய்மாமன் கைது
ADDED : செப் 25, 2024 11:35 PM

கள்ளக்குறிச்சி : கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவியின் தாய்மாமனை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று சென்னையில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். அதை தொடர்ந்து,
ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி, 519 பேரை கைது செய்தனர். கலவர வழக்கை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூக வலைதளம் மூலமாக கூட்டம் கூட்டிய வி.சி., பிரமுகர் திராவிடமணி, மாணவியின் தாய் செல்வி உள்ளிட்டோரை விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிலருக்கு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பினர். மாணவியின் தாய் செல்வி, வி.சி., பிரமுகர் திராவிடமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமன் செந்தில்முருகன்,47; என்பவரிடம் விசாரணை நடத்த, இருமுறை பதிவு தபால் மூலமும், ஒருமுறை நேரிலும் சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார், சென்னை போரூரில் வசித்து வந்த செந்தில்முருகனை நேற்று கைது செய்தனர். அவரை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கலவரம் தொடர்பான வழக்கில், மாணவியின் தாய் செல்வியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்தனர்.