‘மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்’ முதல்வர் ரங்கசாமி ‘அட்வைஸ்’
‘மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்’ முதல்வர் ரங்கசாமி ‘அட்வைஸ்’
ADDED : ஆக 20, 2026 08:11 PM
புதுச்சேரி: மாணவர்கள் போதை பழக்கத்தில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் எய்ட்ஸ் கட்பாட்டு சங்கம் சார்பில், இரண்டு மாத எச்.ஐ.வி., எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரசார துவக்க விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேள் வரவேற்றார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவிற்கு தலைமை தாங்கி, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எய்ட்ஸ் நோயால் வரும் தீமைகள், பரிசோதனைகள் குறித்த, விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கிறது. புதுச்சேரியில் சுகாதாரத் துறை மூலம் சிறந்த மருத்துவ வசதி உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, மக்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் சில உயர் சிகிச்சைகளுக்காக நாம் சென்னை செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இருந்தாலும், அரசு சிறப்பு மருத்துவ வசதி அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் வாழ்க்கையை பழாக்கி கொள்கின்றனர். இளைஞர்கள், மாணவர்கள், போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, சுய ஆபத்து மதிப்பீட்டு கியூஆர் குறியீட்டு பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட செந்நாடா மன்றங்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
திட்ட இயக்குனர் சிவராமன் நன்றி கூறினார்.
