/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலியல் சம்பவத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி மாணவர்கள் மறியல்
/
பாலியல் சம்பவத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி மாணவர்கள் மறியல்
பாலியல் சம்பவத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி மாணவர்கள் மறியல்
பாலியல் சம்பவத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி மாணவர்கள் மறியல்
ADDED : பிப் 18, 2025 06:28 AM

அரியாங்குப்பம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார்- புதுச்சேரியில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவியை கடந்த 14ம் தேதி, அப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
தவளக்குப்பம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆத்திரம் தணியாத பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை சூறையாடியதை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி, அப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், நேற்று காலை 8:30 மணிக்கு, புதுச்சேரி- கடலுார் தேசிய நெடுஞ்சாலையில், தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளி ஆய்வுக்கூடம் சேதப்படுத்தப்பட்டதால், நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வை எப்படி செய்வது. மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளதால், மூடப்பட்ட பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மறியலால் புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த சப் கலெக்டர் இஷிதா ரதி, தாசில்தார் பிரித்வி ஆகியோர், ''இப்பள்ளி மாணவர்கள் அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி தேர்வு மையத்தில் பொதுத் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்காத வகையில், செய்முறை தேர்வுக்கு, மாற்று ஏற்பாடு செய்யப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, பள்ளி மூடப்பட்டுள்ளது'' என்றனர்.
அதனையேற்று மாணவர்களை மறியலை கைவிட்டு காலை 10:30 மணிக்கு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், புதுச்சேரி -கடலுார் சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.