தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் மானியம் அதிகரிப்பு! மாநில அரசு ரூ.30 ஆயிரம் கூடுதலாக வழங்கல்

பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் மானியம் அதிகரிப்பு! மாநில அரசு ரூ.30 ஆயிரம் கூடுதலாக வழங்கல்

பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் மானியம் அதிகரிப்பு! மாநில அரசு ரூ.30 ஆயிரம் கூடுதலாக வழங்கல்


UPDATED : பிப் 18, 2026 07:43 AM

ADDED : பிப் 18, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 07:43 AM ADDED : பிப் 18, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் சோலார் மின் திட்டத்தில், 3 கிலோ வாட் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.78 ஆயிரத்துடன், மாநில அரசு சார்பில், ரூ.30 ஆயிரம் சேர்ந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தியை பெருக்க அனல் மின் நிலையங்களில் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளை எரிப்பதாலும், அணு மின்நிலையங்களில் அணுவை பிளப்பதாலும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது.

இதனை தவிர்த்திட, ஆண்டு முழுதும் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில், ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் வீடுகளில் ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட் மின் உற்பத்தி திறனுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு மொத்தம் ரூ.78 ஆயிரம் மானியம் வழங்குகிறது. மேலும், இந்த சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 6 சதவீத வட்டியில் கடனுதவி வழங்குகிறது.

இத்திட்டத்தில் 3 கிலோ வாட் சோலார் மின் நிலையம் அமைத்தால் ஆண்டிற்கு 4,500 யூனிட் மின்சாரத்தை பெறலாம். நுகர்வோர்கள், தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்த மின்சாரத்தை தங்கள் தேவைக்கு போக, உபரி மின்சாரத்தை மின்துறைக்கு விற்பனை செய்ய முடியும். அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இத்திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் அறியும் வகையில் மின்துறை சார்பில், பகுதி வாரியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் இத்திட்டத்தில் சோலார் மின் நிலையம் அமைக்க 3,428 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 2,475 பேர் சோலார் மின் நிலையம் அமைத்து, மத்திய அரசின் மானியமாக ரூ.17.39 கோடியை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சோலார் மின் நிலையம் அமைக்க ஊக்குவிக்கும் பொருட்டு, புதுச்சேரி அரசு சிறப்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வரை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பிரதமரின் சோலார் மின் திட்ட பயன்களை பொதுமக்கள் பெருமளவில் பெறுவதற்காகவும், அவர்களது மூலதன முதலீட்டின் சுமையை குறைப்பதற்காக, மாநில அரசு தன் பங்காக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.10 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.20 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்க புதுச்சேரி அரசாணை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் மானியம் முதலில் சோலார் மின் நிலையம் அமைக்கும் 13 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். மாநில அரசின் மானியத்தால் நுகர்வோர்கள் மத்திய அரசின் மானியத்தோடு சேர்த்து ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.40 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.80 ஆயிரமும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.1.08 லட்சம் வழங்கப்படும்.

இந்த மானியம், இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே தங்கள் வீடுகளில் சோலார் மின் நிலையம் அமைத்தவர்களுக்கும் வழங்கப்படும்.

பதிவு செய்வது எப்படி?

பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தை தங்கள் வீடுகளில் செயல்படுத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெ யில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94890-80373, 94890-80374 மற்றும் ee2ped.py.gov.in என்ற இமெயில் தொடர்பு கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us