விசைப்படகில் திடீர் தீ விபத்து ரூ. 5 லட்சம் பொருட்கள் சேதம்
விசைப்படகில் திடீர் தீ விபத்து ரூ. 5 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : மே 24, 2026 03:04 AM

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால், விசைப்படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது விசைப்படகில் பராமரிப்பு பணிகள் நடந்தது.
அதில், வெல்டிங் வேலை செய்தபோது படகில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
பின், மீனவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ அதிகமாக பரவியதால், தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் விசைப்படகில் இருந்த மீன் பதப்படுத்தும் ஐஸ் பெட்டி அறை, வலைகள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்து குறித்து நிரவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
